சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில், சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.மேலும், சுவாசப் பிரச்சனை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனையின் ஒரே அறையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் பேசும்போது, “சினாவின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், அங்கு தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பரவலின் தீவிரம் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. கரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடையக் கூடியவை. எனினும், இதனை சீனா சிறப்பாக கையாளும் என்று நம்புகிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் சீனா வலுவாக இருக்க வேண்டும் என்பது சீனாவுக்கு மட்டும் நல்லதல்ல, உலக நாடுகளுக்கும் நல்லது” என்றும் தெரிவித்துள்ளார்.