புதுடெல்லி : பருவநிலை மாற்றம் காரணமாக பூமியின் வெப்பநிலை உயர்ந்து பனிப்பாறைகள் உருகுவதால், பனிமலைப் பகுதிகளில் உள்ள பனி ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து அவை உடையும் நிலை அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பனி ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படக்கூடிய அதிக அபாயம் குறித்து முதல்முறையாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நியூகேசில் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஒரு சர்வதேச குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவுகளின்படி, பனி ஏரிகள் உடையும் அபாயத்தால் உலகளவில் பாதிக்கப்படக்கூடிய மக்களில் பாதிப்பேர், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பெரு ஆகிய நான்கே நாடுகளில் வசிக்கின்றனர். அதிலும் பாதிக்கப்படக்கூடிய மக்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.பனி ஏரிகள் உடையும் அபாயத்தால், இந்தியாவில் மட்டும் 30 லட்சம் மக்களுக்கு ஆபத்து என்றும், இது உலகிலேயே அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பனி ஏரிகள் திடீரென உடைந்து, சீறிவரும் வெள்ளத்தால் 120 கி.மீ. தூரத்துக்கு மேல் கூட பாதிப்பு இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். உலகளவில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பனி ஏரிகளின் எண்ணிக்கையும் வெகுவேகமாக அதிகரித்திருக்கிறது. அதேநேரம், அவற்றையொட்டி வாழும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. பனி ஏரிகள் உடைவால் எந்தெந்தப் பகுதிகளில் அதிக அபாயம் இருக்கிறது, அதனால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதத்தை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.