நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தலைமையில் தொடங்கியது. எனினும், முதல் நாளான இன்று அவை தொடங்கியது முதலே உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, அவை தொடங்கியதும் முதல் நிகழ்வான மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வாகியுள்ள எம்.பி.,க்கள் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 28 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயத் அல் நயான், கென்ய முன்னாள் அதிபர் வாய் கிபாகி, மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர்களான கிஷோர் குமார் மொகந்தி, ராபர்ட் கர்ஷீங், கே.கே. வீரப்பன் ஆகியோரின் மறைவுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, மாநிலங்களவையின் வழக்கமான அலுவல்கள் தொடங்கின. எனினும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா கட்சிகளின் உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.