சென்னை: கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது.
மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று தி கேரளா ஸ்டோரி படம் சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இன்று சென்னையில் 4 இடங்களில் இந்த போராட்டம் நடை பெறுகிறது. சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கிறார்.