திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த செவ்வாய் கிழமை முதல் சோதனை நடத்தினர். அதில், திரைப்பட பைனான்சியரும், விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான கோபுரம் பிக்சர்ஸ் அன்புச்செழியன், சக்திவேல், மன்னர், எஸ் பிக்சர்ஸ் சீனு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், பிரின்ஸ் பிக்சர் லஷ்மன் ஆகியோரின் வீடுகள், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த செவ்வாய் கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து நள்ளிரவு வரை நீடித்த சோதனையை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் அன்புச்செழியன் வீடுகளை தவிர மற்றவர்களுக்கு சொந்தமான இடங்களில் முடித்துக்கொண்டனர். வருமான வரித்துறையினர். இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக எஸ்.தாணு மற்றும் அன்புச்செழியனுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையைத் தொடர்ந்து நடத்தினர். இந்த நிலையில், நேற்று இரவு வரை மதுரையில் அன்புச்செழியனின் வீட்டில் நடத்திய சோதனையை முடித்துக்கொண்டுள்ளனர். சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்கள், கணக்கில் கட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மட்டும் 4ஆவது நாளக இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது.