விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா, காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பு, தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பரிசு ஒன்று காத்திருக்கிறது என அறிவித்திருந்தார். மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படிக்க பரிசு தருவதாக கூறி உற்சாகப்படுத்திருந்தார். இந்த நிலையில், நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்த ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த மாணவி லோகிதாவுக்கு அவரின் வாழ் நாளில் மறக்க முடியாத பரிசை தலைமை ஆசிரியர் சசிகலா வழங்கியுள்ளார். அது என்னவென்றால், முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை இருக்கையில் அமர வைத்து, அவருக்கு கிரீடம் சூட்டி ‘ஒருநாள் தலைமை ஆசிரியர்’ பொறுப்பு கொடுத்து அழகுபார்த்துள்ளனர். இதையடுத்து மாணவி லோகிதா, ஒருநாள் முழுவதும் தலைமை ஆசிரியையாக பணியாற்றி உள்ளார்.