நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குட்டியானை ஒன்று அடித்து வரப்பட்டுள்ளது. இதையடுத்து, தகலறிந்த வனத்துறையினர் குட்டியானையை தாய் யானையிடம் சேர்க்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்களும் இணைந்து 8 குழுக்களாக பிரிந்து ஈடுபட்டனர். கடந்த மூன்று நாட்களாக பல பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி, இறுதியாக நேற்று இரவு பூபதிப்பட்டி பகுதியில் யானைகள் கூட்டத்துக்கு அருகே பெண் யானை ஒன்று தனியாக இருப்பதை கண்டறிந்து அதனிடம் குட்டியானையை சேர்த்தனர். பின்னர், தாய் யானை குட்டியானையை அழைத்து அடர் வனப்பகுதிக்கு சென்று மறைந்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.