மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி, ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை முழுவதும் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக இந்திய வீரர் சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தொடர் போட்டிகள் காரணமாக ஓய்வு தேவைப்பட்டதால், இந்திய அணியின் மூத்த விளையாட்டு வீரர்கள் யாரும் இந்த தொடரில் விளையாடவில்லை. எனினும், இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் டி20 போட்டிகளில் முதலாவது போட்டி, டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் முதல் 3 ஆட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடக்கவுள்ளன. இதையடுத்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.