இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுடன் முதலில், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த நிலையில், மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளது. இதில், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், கேப்டன் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், சுபமன் கில், இஷான் கிஷன், ஷர்துல் தாகுர், தீபக் சஹர், குல்தீப் யாதவ், ரவி பிஸ்ணோய், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் டெம்பா பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. ஏற்கனவே, டி20 போட்டி தொடரை கைவிட்டதால் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் சொந்த மண்ணில் தொடரை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும் விளையாடவுள்ளதால் ரசிகர்கள் இவர்களின் விளையாட்டைக்காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.