சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியில் உள்ளது வசவன்பட்டி சண்டிவீரன் கோவில். இங்கு சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவதை எதிர்த்து சேதுபதி என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கில், வசவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், வழக்கை இன்று விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், கோவிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே, மனிதர்களுக்கு அல்ல என்று கருத்து தெரிவித்ததுடன், கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிகப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.