சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை மாதம் 28ஆம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 188 நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர்ஜோதி ஓட்டத்தினை டெல்லியிலுள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஜோதி கடந்த 40 நாட்களாக சென்னை உட்பட இந்தியாவின் 75 முக்கிய நகரங்களில் பயணித்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வந்தடைந்தது. கொரோனா பெரும் தொற்று பரவல் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காணொலி காட்சி வாயிலாக மட்டுமே நடைபெற்றுள்ளது. இதையடுத்து, கொரோனா பெரும் தொற்று கட்டுக்குள் கொண்டவரபட்ட நிலையில், இந்தாண்டு நடத்தப்பட உள்ள போட்டி முதலில் பெலாரஸ் நாட்டில் நடைபெறவே திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், அது ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு மாற்றப்பட்டது. எனினும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து இந்த போட்டி அங்கு நடைபெறாது என சர்வதேச சதுரங்க போட்டிகளின் கூட்டடமைப்பு அறிவித்தது. இதைதொடர்ந்து இந்த போட்டி நடத்தும் வாய்ப்பு இந்தியா பெற்றது. இந்த நிலையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.