மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி, டி20 போட்டிகளில் முதலாவது போட்டி, டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் விளாசினார். இது அவரின் 27ஆவது அரைசதமாகும். தினேஷ் கார்த்திக் 41 ரன்களை அதிரடியாக சேர்த்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷமர் புரூக்ஸ் 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் அபார வெற்றிப்பெற்றது. இரு அணிகள் மோதும் அடுத்த போட்டி நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.