தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு டான்செட் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. MBA., MCA., M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளுக்கும் இரு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்றது. சென்னை, மதுரை மற்றும் கோவை போன்ற 14 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தமிழகம் முழுவதும் 36,710 மாணவர்கள் இந்த டான்செட் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியானது. இந்தநிலையில், மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் இந்த மாதம் 30ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.