நடராஜரும்…. நானும்…..இடையில்… நாரதர்கள் வேண்டாமே!!!!! என்ற தலைப்பில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான மருத்துவர்.தமிழிசை செளந்தரராஜன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் தரிசனத்திற்கு சென்றபோது நடந்த சுவையான சம்பவம் என்று தான் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் அபிஷேகத்தின்போது, படியில் அமரவேண்டாம் என தமிழிசையை, தீட்சிதர் ஒருவர் கூறியதாகவும், அதற்கு அவர் இறைவனை தரிசிக்க வந்துள்ளேன், இங்குதான் அமர்வேன் என கூறியதாக கூறப்பட்டது. இந்தநிலையில் தனது பதிவின் மூலம் பதிலளித்துள்ள தமிழசை, ”மகிழ்ச்சியாகவே இறைவனை தரிசனம் செய்தேன். யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை… எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது”… என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.