1968ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை மாதம் 18ஆம் தேதி) மதராஸ் மாகாணம் என்று இருந்த மாநிலத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என்று சட்டப்பேரவையில் பெயர்மாற்றம் செய்து அப்போதைய முதலைமைச்சர் கா.ந.அண்ணாதுரை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தினத்தை தமிழ்நாடு அரசு சார்பில் ’தமிழ்நாடு நாள்’ என்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு நாள் தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை இராணி மேரிக் கல்லூரி எதிரே உள்ள மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நாள் என்ற மணல் சிற்பம், ஒடிசா மாநிலத்தை சார்ந்த மணற் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பம் வடிவமைக்க 50 டன் மணல் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இலச்சினை, தலைமைச் செயலகம், பேரறிஞர் அண்ணாவின் உருவம் ஆகியவை மணல் சிற்பத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.