ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. முன்னதாக முந்தைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, இந்த சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும், இந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க, சிறப்பு சட்ட குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இந்த விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், இரண்டு வாரங்களுக்குள் பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்த சமூகப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இந்த சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.