சென்னை நேரு ஸ்டேடியத்தில், 61ஆவது தேசிய சீனியர் தடகள போட்டி கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள இந்த போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் 700-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் தனலட்சுமி (23.27 வினாடி) ஹிமா தாசை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். அதேபோல, 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் ஆர்.வித்யா (57.08 வினாடி) தங்கம் வென்றுள்ளார். மேலும், டிரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டுதல் பந்தயத்தில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் (17.18 மீட்டர்) புதிய சாதனையைப் படைத்து தங்கப் பதக்கம் பெற்றார். போட்டியின் கடைசி நாளில் தமிழக வீரர்கள் பிரவீன், தனலட்சுமி, வித்யா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இதனையடுத்து, இந்தப்போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி கைப்பற்றியுள்ளது.