நாடு முழுவதும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சேர அடிப்படையான தேசிய தகுதி நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் நேற்று இரவு வெளியானது. தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை அதன், அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/-ல் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடந்த தேர்வில் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்த நிலையில், 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வு எழுதினர். இதில், 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி, சதவீதம் 56.3 ஆக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இது, 51.3 சதவிகிதமாகும். மேலும், 720 மதிப்பெண்ணுக்கு 715 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இதில் இந்திய அளவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் 30ஆவது இடத்திலும், மாணவி 43ஆவது இடத்திலும் உள்ளனர். நீட் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.