சென்னை: மாநில மகளிர் கொள்கைக்கான வரைவு கொள்கை கடந்த 2021-ம்ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, கருத்து கோரப்பட்டது. பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் தற்போது முழுமையான கொள்கை வெளியிடப்பட உள்ளது. இந்த கொள்கையை மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். தமிழகத்தில் பெண்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத்தரும் வகையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்கல்வி இடைநிற்றலை குறைக்கவும், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஆயிரம் பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதும் மகளிர் கொள்கையின் முக்கிய இலக்காகும். இதுதவிர ‘வாழ்ந்து காட்டு பெண்ணே’ என்ற திட்டம் மூலம் மகளிர் வங்கி தொடங்கப்பட்டு பெண்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்படும்.
மகளிர் புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பெண்களுக்கு தலைமை பொறுப்பில் பணியாற்ற நடவடிக்கை எடுப்பது இக்கொள்கையின் முக்கிய அம்சமாகும். இதுதவிர, அரசியலுக்கு வரவிரும்பும் பெண்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படும் என்றும் வரைவுக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில மகளிர் கொள்கையில், மகளிர் மேம்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற கூடும் என தெரிவித்துள்ளனர்.