தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில், உலகம் முழுவதும் உள்ள சிறந்த பல முக்கிய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகளில் தமிழகம் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி உள்ளிட்ட அனைத்து நாட்டு அணிகளின் முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்பதாக தெரிவித்திருந்தது. இந்த போட்டிக்கான நிதியாக ரூ.92 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து இருந்த நிலையில், முதற்கட்டமாக, போட்டிக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், விளையாட்டு மையங்களை அமைக்க ரூ.5 கோடியும், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பரிசோதனை, மருத்துவ குழுவுக்கு உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு 2700 அறைகள், உணவு அடிப்படை வசதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.