சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 188 நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான கோலாகலமாக தொடக்க விழாவை நேற்று மாலை பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். இதற்காக பிரதமர் தனிவிமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர்ஜோதி ஓட்டத்தினை டெல்லியிலுள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஜோதி கடந்த 40 நாட்களாக சென்னை உட்பட இந்தியாவின் 75 முக்கிய நகரங்களில் பயணித்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கு வந்த ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சரிடம் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வழங்க அதனை பெற்றுக்கொண்ட பிரதமரும் முதலமைச்சரும் ஜோதியை இந்திய செஸ் விளையாட்டு வீரர்களான பிரக்ஞானந்தா, விஜயலட்சுமி மற்றும் குகேஷ் ஆகியோரிடம் கொடுக்க அதை பெற்றுக்கொண்டனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, செஸ் போட்டிகளின் மிகவும் பெருமைமிக்க செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுகிறது. செஸ் விளையாட்டின் தாய்நாடான நமது நாட்டுக்கு ஒலிம்பியாட் வந்துள்ளது என்று தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, செஸ் விளையாட்டுக்கும் இந்தியாவுக்கும் அதிலும் முக்கியமாக தமிழகத்துக்கு உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டு தொடர்பையும் சிறப்பையும் அழகு பட எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உட்பட அனைத்துத் துறை அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் கண்கவர் வண்ணம் இருந்ததால் உள்ளூர் மக்களுடன் அன்னிய நாட்டு விளையாட்டு வீரர்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.