சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறினார்.பெண்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டம், எப்போது தொடங்கப்படும்?, யார்-யார் பயனாளிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
பி.எச்.எச். என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) ரூ.1,000 கிடைக்கும். அதே நேரத்தில் இந்த ட்டத்தை பெறுவதில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் ஆகியவையும் கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது.அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது. புதுமைப்பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளின் தாயார் இந்த திட்டத்தில் பயன்பெற தடை எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை வழங்குவதிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிகிறது.
தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் (மார்ச்) 9 அல்லது 10-ந்தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அந்த பட்ஜெட்டில், மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.அதன்பின்னர், அமைச்சரவை கூடி இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதும், விரிவான அரசாணை வெளியிடப்படும். அதில் விதிமுறைகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.