அரியலூர் மாவட்டம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கார்த்திக்.ஏழ்மையான நிலையிலும் கார்த்திக்கிற்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொண்ட பெற்றோர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். பெங்களூருரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஆக்கி அணிக்குத் தேர்வானார்.
இருப்பினும், பயிற்சி பெறுவதில் அவருக்கு போதிய பண வசதி இல்லாமல் தவித்து வந்தார். இதுபற்றிய தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முதலமைச்சர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். 2 நாட்கள் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்தார்.
இவர், 2022-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து, கார்த்திக்கின் சாதனையை போற்றும் விதமாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கார்த்திக்கிற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று கார்த்திக் குடும்பத்தினரிடம் வழங்கினார்.