எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தும் மோதுகின்றன. இரு அணி வீரர்களும் இறுதிப்போட்டிக்குள் செல்ல கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து அணியை பொருத்தமட்டில் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. இதேபோல், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். இரு அணிகளும் சம பலத்துடன் காணப்படுகின்றன. அதனால், நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் இந்தப்போட்டி தொடங்குகிறது. இந்த மைதானத்தை பொருத்தவரை இங்கு நடந்துள்ள சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ‘டாஸ்’ ஜெயித்த அணிகள் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.