டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர்12 சுற்றில் நேரடியாக விளையாடவுள்ள அணிகளின் பயிற்சி ஆட்டங்கள் மற்றும் சூப்பர்12 சுற்றில் நுழைவதற்கான தகுதி சுற்றின் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. இதில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்துள்ளன. இதையடுத்து, சூப்பர்12 சுற்றில் உள்ள 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக, பிரிவு1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் பிரிவு2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும். இந்தநிலையில், இன்று சிட்னியில் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியையும், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த்தில் நடக்கும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்க்கொள்கிறது.