இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்து அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் சேர்க்கையை ரத்து செய்து பாதியில் வெளியேறினால் 100 சதவிகித கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. சேர்க்கையை ரத்து செய்வதற்காக தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி 2022ஆம் ஆண்டுக்குள் சேர்க்கைகளை ரத்துசெய்தால், அந்த மாணவரிடமிருந்து வசூலித்த முழுக் கட்டணத்தில் செயலாக்கக் கட்டணமாக ரூ.1000-க்கு மேல் கழித்துக்கொண்டு மீதத் தொகையை முழுமையாகத் திருப்பித் தர வேண்டும் எனவும், இதுதொடர்பான வழிமுறை உத்தரவை உறுதிசெய்யுமாறு அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களையும் யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதால், அவர்களின் நலன் கருதியும், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பணக் கஷ்டங்களை எண்ணத்தில் கொண்டு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக வேறு கல்லூரிகளில் சேர்வதற்காக இடை நின்றால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்வதற்கு தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.