திரைதுறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது அகாடமியின் உறுப்பினராக இணைய இந்த ஆண்டு தேர்வு செய்யப்படவுள்ள 397 பேரில் தென்னிந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, பாலிவுட்டைச் சேர்ந்த நடிகை கஜோல், பாலிவுட் இயக்குநர் ரேமா கக்தி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்ந்தெடுப்பது இந்த உறுப்பினர்கள் தான். உலகம் முழுவதும் சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட ஆஸ்கர் அகாடமியில் ஆண்டுதோறும் உறுப்பினர்கள் மாறுபடுவதுண்டு. இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இணையத்தில் ஆஸ்கர் அகாடமியில் சூர்யா தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துவருவதால் சமூக வலைதளங்களில் சூர்யா ட்ரெண்டிங்கில் உள்ளார்.