மும்பை : தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் நிலையில், தற்பொழுது டெல்லியை மிஞ்சி இருக்கிறது இந்தியாவின் வியாபார ஸ்தலமான மும்பை. காற்றின் தரம் ஏ.கியூ.ஐ. என்ற அளவை கொண்டு கணக்கிடப்படும் நிலையில் ஏ.கியூ.ஐ. 1 முதல் 100 வரையிலாக இருந்தால் நல்லது ,100 முதல் 200-க்குள் இருந்தால் பரவாயில்லை ,200 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 300-க்கும் மேல் இருந்தால் மிகவும் மோசம் என்றும் அளவிடப்படுகிறது. நேற்று மும்பையில் காற்றின் தரம் ஏ.கியூ.ஐ.309 ஆகவும்,(மிகவும் மோசம்) டெல்லியில் காற்றின் தரம்ஏ.கியூ.ஐ. 249 (மோசம்) என்ற அளவிலும் பதிவாகி இருந்தது.நேற்று முன்தினத்தை பொறுத்தவரை மும்பையில் 315 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் காற்றின் தரம் பதிவாகி இருந்தது.
மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது: கட்டுமான பணிகளால் காற்று மாசு அதிகரித்து இருப்பது என்பதை ஏற்க முடியாது. கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடக்கிறது. மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம், ஆர்.சி.எப், எச்.பி.சி.எல். போன்ற நிறுவனங்கள் அதிகளவில் கழிவுகளை வெளியேற்றுகின்றன. அதுதான் காற்று மாசு அதிகரிக்க காரணம். இந்த பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசி உள்ளோம். மும்பையில் சில நாட்களில் ஜி20 மாநாடு கூட்டங்கள் நடக்க உள்ளன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர். எனவே காற்று மாசு பிரச்சினை குறித்து பெட்ரோலிய அமைச்சகத்துடன் பேசி உள்ளோம். இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.