சென்னை: அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சில பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக நாளை முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.