பஞ்சாப் மாநிலம் சண்டீகர் பல்கலைக்கழக மாணவிகளின் வீடியோ ஒன்று அதே பல்கலைக்கழக மாணவி ஒருவரால் அவரின் ஆண் நண்பருக்கு பகிரப்பட்டதாக கடந்த சனிக்கிழமை இரவு புகார் எழுந்தது. இதையடுத்து, வீடியோவை பகிர்ந்ததாகக் கூறப்படும் மாணவி கைது செய்யப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஆண் நண்பர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவி தனது தனிப்பட்ட வீடியோவையே அவரே பகிர்ந்ததாகவும், மற்ற மாணவிகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவில்லை எனவும் பல்கலைக்கழகத்தினரிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்பாக, காவல்துறை பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.