தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறாது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவித்தது. இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் ‘வெப்சைட்டுக்குள்’ சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் நடந்த சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கம்ப்யூட்டர் தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆதார் இணைக்கும் பணி பாதிக்கப்படக்கூடாது. தேசிய விடுமுறை மற்றும் விழா நாட்களை தவிர ஞாயிறு உட்பட ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு கவுண்டர்கள் செயல்பட வேண்டும்.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எந்த தொகையும் வசூலிக்க கூடாது. லஞ்சம் கேட்கக் கூடாது. யாராவது பணம் வாங்கியதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதை கவனிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதாரை இணைக்கும் பணி முன்னேற்றத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்களை ஒவ்வொரு அலுவலகத்திலும் பிளக்ஸ் பேனர் வைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.