சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 43 சவரன் தங்க நகையை வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த பையை கண்டெடுத்த ஏடிஎம் காவலாளி கோதண்டம் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, பையை மீட்டு காவல்துறையினர் ஏடிஎம் இயந்திர அறையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பையை வீசி சென்ற பெண்ணிடமே வழங்கியுள்ளனர். மன அழுத்தத்தில் இருந்ததால் இவ்வாறு நடந்துக்கொண்டதாக அந்த பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பையை நாணயத்துடன் காவலர்களிடம் ஒப்படைத்த காவலாளி கோதண்டத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.