தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியா் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதற்கு இணங்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் நியமனத்தில் திருத்தம் செய்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த நிலையில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையை விலக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் இன்று முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும்? அதில் என்ன அவசரம் இருக்கிறது? இதற்கு பதிலாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே? என்று கூறி ஏற்கனவே பட்டியலிடப்பட்ட ஜூலை 8ஆம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். முன்னதாக தமிழக அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் நேற்று (ஜூலை 4) தொடங்கி ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை முடியவுள்ள நிலையில் நீதிமன்றம் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்துள்ளதால் மதுரைக்கிளையின் கீழ் உள்ள மாவட்டங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.