மும்பை: பாரத ஸ்டேட் வங்கி, நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) 10 அடிப்படை புள்ளிகளாக (BPS) அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பின் எதிரொலியாக நுகர்வோர் கடன் வாங்குபவர்களுக்கு கடனுக்கான செலவு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தக் கடன் வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் எஸ்பிஐ தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
10 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளதன் காரணமாக நிதி அடிப்படையிலான கடன் விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஒரு மாத கால அவகாசத்திற்கான விகிதம் 8.00 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஜனவரியில் மூன்று மாத கால அவகாசத்திற்கான விகிதம் 8.10 சதவீதம், ஆறு மாத கால விகிதம் 8.40 சதவீதம் என உயர்த்தப்பட்டது.
அதுவே ஓராண்டுக்கான விகிதம் 8.50 சதவீதம் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கான விகிதம் 8.60 சதவீதம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான விகிதம் 8.70 சதவீதம் என்றும் உயர்ந்துள்ளது.