சென்னை : எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேரும், புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் பள்ளி மாணவர்களாக எழுத இருக்கின்றனர்.
மேலும், தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர். மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர்.
அரசின் தேர்வுத்துறை, பொதுத்தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு எவ்வளவு பேர் எழுதுகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தை வெளியிடும். ஆனால் தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் புள்ளிவிவரங்கள்கூட, கல்வித்துறை வட்டாரத்தில் வெளியான மறைமுக தகவல்களை அடிப்படையாக கொண்டவைதான். அதிகாரப்பூர்வமாக புள்ளிவிவரங்கள் வெளியிடாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், தேர்வு முடிந்ததும் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ விவரங்களை வெளியிடவும் அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.