இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதர நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வாழவழியின்றி மற்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். தொடர்ந்து கடுமையான போராட்டங்களுக்கு பிறகு ஆளும் அரசுக்கும் பொதுமக்கள் முற்றுபுள்ளி வைத்தனர். எனினும் அங்கு நிலைமை மாறவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.470ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.460ஆகவும் உயர்ந்துள்ளதால் ‘டோக்கன்’ முறையை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. முன்னதாக இலங்கையில் 2 மாதங்களில் 3ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று (ஜூன் 27) முதல் ஜூலை 1ஆம் தேதி வரை கொழும்பு மற்றும் இதர நகர பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் மூடப்படுவதாக அந்த நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் நடக்கவிருந்த தேர்வுகள், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், சலுகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.