கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், வரலாறு காணாத மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் எதிர்கட்சியினர் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதனையடுத்து, அங்கு இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோடியதாக தகவல் வெளியானாலும், அவர் எங்கு சென்றார் என்ற எந்தவித தெளிவான தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிகாரப்பூர்வமாக கோத்தபய ராஜபக்ச தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.