முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். அதில், 30 ஆண்டுகள் தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளதாகவும், இந்த பயணத்தில் தன்னுடன் இருந்த ஒவ்வொருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இனி பலருக்கும் உதவும் வகையில் புதிய தொடக்கத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் கூறி இருந்தார். கங்குலியின் இந்த பதிவால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த பதிவின் மூலம் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து கங்குலி விலகுவதாக வதந்திகள் பரவத்தொடங்கியது. இந்தநிலையில், பிசிசிஐ செயலர் ஜெய்ஷா இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகமாட்டார் என்று கூறியிருந்தார். இந்தநிலையில், இன்று செளரவ் கங்குலி இதுகுறித்து கூறுகையில், ”நான் உலக அளவில் ஒரு புதிய கல்வி செயலியை அறிமுகப்படுத்த உள்ளேன். ராஜினாமா குறித்து வெளியான வதந்திகள் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அது ஒரு எளிய ட்விட். மற்றபடி ராஜினாமா குறித்து நான் எதுவும் குறிப்பிடவில்லை” என தெரிவித்துள்ளார்.