சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (ஜூலை 24) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத் திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், அமைச்சரால், 2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.