சென்னை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) சார்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணைய வழியாகவும் நடைபெற உள்ளது. இன்றைய கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து, நாளை அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாகவும், தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு 25ஆம் தேதி வரை இணையவழியிலும் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 21 முதல் 27-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணையவழியே நடைபெறவுள்ளது. வரும் 30ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் தகுதி பெற்றவர்கள் நவம்பர் 4ஆம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.