காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஏப்ரல் மாதம் முதலே தேர்தல் தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். அதற்காக தொடர்ந்து மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இந்த நிலையில், அவருக்கு கடந்த 1ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதையடுத்து, சோனியாவுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த வார தொடக்கத்தில் சோனியாவின் உடல்நிலை மோசமானதையடுத்து டெல்லி கங்காராமில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சோனியா பதற்றத்துடன் காணப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தது. தற்போது, சோனியா காந்தியின் சுவாசக் குழாயில் கொரோனா நோய் தொற்றால் ஏற்படக்கூடிய இணை பாதிப்பான, பூஞ்சை தொற்று ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.