திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை (47) என்பவரின் தாய் அரசம்மாள் (70) கடந்த 29ஆம் தேதி தனது வீட்டின் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார். மகன் திருமணம் முடிந்த நிலையில் தனியாக வேறு வீட்டில் வசித்து வந்த அரசம்மாள் இறப்பில் சந்தேகமடைந்த நெல்லை தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது, அண்ணாமலையிடம் விசாரித்தபோது குடும்ப பிரச்னையில் தனது தாய் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். எனினும், தற்கொலைக்கான முகாந்திரம் இல்லாததால் அண்ணாமலையிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல் துறையினரின் விசாரணையில், அரசம்மாளை மகன் அண்ணாமலை மற்றும் மருமகள் அனிதா இருவரும் சேர்ந்து தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, குடும்ப பிரச்னை மற்றும் சொத்து பிரச்னை காரணமாக அரசம்மாளை துன்புறுத்தி சம்பவத்தன்று வீட்டில் கிடந்த விறகில் தீ வைத்து அவரை அந்த தீக்குள் தள்ளியதை ஒப்புக்கொண்ட அண்ணாமலை மற்றும் அனிதா மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.