வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், காணொலி வாயிலாக பேசிய அவர், “கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கு தாமதமின்றி மீட்பு படையினரை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், வெள்ள நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதில், முதியோர்கள் கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மக்களுக்கு தேவையான பால் மற்றும் குடிநீர் தடையில்லா வழங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார். இத்துடன், மழை வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு துறைகள் தனித்தனியாக இயங்காமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவசர உதவி மையங்கள் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்று எடுத்துரைத்ததுடன் நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் மக்களை காக்க வேண்டும் அதுவே இலக்கு என்றார். மேலும், தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் மூலமாகவோ வரக்கூடிய புகார்களை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுளார். சிறு தவறுகள் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் திறம்பட செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.