திருவள்ளூர் மாவட்டம் மாபூஸ்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (41). ஓவியரான இவர் திருமணம் ஆகாத நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு தனிமையில் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் பூபாலனுக்கும் அதேபகுதியில் வசித்துவரும் இவரது சகோதரி தனலட்சுமிக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு பூபாலன் சகோதரியின் கணவர் ரவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பூபாலன் அண்மையில் பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து அவர் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, பூபாலன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூபாலன் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நேற்று இரவு பூபாலனின் சகோதரி தனலட்சுமி மற்றும் அவரது கணவர் ரவி தனது குடும்பத்தினர் சேர்ந்துக்கொண்டு சொத்து தகராறின் காரணமாக பூபாலனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பூபாலனின் சகோதரி தனலட்சுமி மற்றும் அவரது கணவர் ரவி ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக மனநலம் பாதிக்கப்பட்ட சொந்த சகோதரரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.