அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிச்சிடம் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். முன்னதாக 40 வயதான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவின் வோக் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில், அமெரிக்க ஓபன் போட்டிக்குப் பிறகு மகளிர் ஒற்றையர் டென்னிஸிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, தனது 27 வருட தொழில் முறை டென்னிஸ் போட்டிகளில் விளையாடி மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் விருதுகளை பெற்ற செரீனா தற்போது விடைபெறுகிறார். இறுதியாக, 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கங்களை வென்ற மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில் தோல்விக்கு பிறகு செரீனா ஓய்வை அறிவித்த முதலே அவரின் இறுதி போட்டிகளை டென்னிஸ் ரசிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.