அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்நிலையில், தனது கணவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்துள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று (ஜூலை 4) நீதிபதி ஜெ.நிஷாபானு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நேரடியாகவும், நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து காணொலி வாயிலாகவும் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்தனர். முதலில் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்கிறேன். எனவே, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றார்.
ஆனால் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் கிடையாது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறேன்.” என்று தெரிவித்தார். நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால், மூன்றாவது நீதிபதியை நியமிக்க, இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ‘‘இந்த வழக்கில் 3-வது நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும். மேலும், மெரிட் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகள் எதுவும், சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.