சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி ஏப்.3ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மொழித் தேர்வை 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை எனபது தெரியவந்துள்ளது.
இதன்படி, பள்ளி மாணவர்களில் 49,559 பேரும், தனித்தேர்வர்களில் 1,115 பேரும் தேர்வை எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதற்கு பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழ் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்:- நேற்று +2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் தேர்வு எழுத கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்பு, தேர்வு எழுதாத மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.