சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி வசூலிப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வணிகம் கட்டடங்கள் மட்டுமின்றி குடியிருப்பு கட்டடங்களிலும் நீண்ட கால நிலுவையில் வைத்திருப்பவர்களை கண்டறிந்து வரி செலுத்த நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இத்துடன், தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் மக்களுக்கு வரி குறித்து நினைவூட்டும் மாநகராட்சி நிர்வாகம், சரியான நேரத்தில் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ஐந்து சதவிகிதம் தள்ளுபடி அளித்து சலுகை வழங்கி வருகிறது. மேலும், நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வீடுகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், சொத்து வரி செலுத்தாத குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி கால அவகாசம் வழங்கப்படும். தொடர்ந்து செலுத்தாமல் காலதாமதம் செய்தால் அபராதம் மட்டும் விதிக்கப்படும் ஆனால் சீல் வைக்கப்படாது. சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு குடியிருப்பு வாசிகள் ஆட்சேபனை தெரிவித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ளதுபோல் வணிகம் சார்ந்த மனைகள் மற்றும் கட்டிடங்களுக்கு நீண்ட காலம் வரி செலுத்தவில்லை என்றால் சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.