ஈரோடு : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் நடக்க இருக்கும் நிலையில், ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் அனைத்தும் பெறப்பட்டன. முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாற்று வேட்பாளர் மனு, கூடுதல் மனு என்று மொத்தம் 121 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.
இடைத்தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வில் வேட்பாளர்கள் சிலரும், வேட்பாளர்களின் முகவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அவர்களின் முன்னிலையில் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் படிவம் முறையாக நிரப்பப்படாதவை, உரிய கையொப்பங்கள் இல்லாதவை, முன்மொழிவுகள் இல்லாதவை என்று பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரசியல் கட்சியின் அங்கீகார வேட்பாளரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மாற்று வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி 83 பேர் போட்டியில் உள்ளனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் வாபஸ் பெறுவது உறுதியாகி இருக்கிறது.