சென்னை: தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டப் பணிகள், துறை வாரியாக தொகுக்கப்பட்டு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 9-ந்தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல், சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அற நிலையத்துறை, பள்ளி கல்வி, சுற்றுச்சூழல், வனத்துறை, கால்நடை, பால்வளம், மீன் வளம், பொதுத்துறை, உயர்கல்வி, தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சமூக நலன் மகளிர் உரிமை, வருவாய் துறை ஆகிய 12 துறைகள் சார்ந்த 51 திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இன்று மீண்டும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை ஆய்வு செய்தார். இதில் தொழில் துறை, கூட்டுறவு-உணவுத்துறை பொதுப்பணித்துறை, செய்தித் துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறைகளின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரும் பங்கேற்றனர்.